கலைஞர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Chennai: தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை சற்று முன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ கலைஞர் கருணாநிதியின் உடல் நிலை கடந்த சில மணி நேரங்களாக மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. மிகத் தீவிரமான சிகிச்சை அளித்த போதும் அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைந்து வருகிறது” என்று கூறியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு அறிக்கையில் கூறப்பட்ட தகவல்கள் கருணாநிதி மிகவும் அபாயக்கட்டத்தில் இருப்பதாக உணர்த்துகிறது. நேற்று மாலை வந்த அறிக்கையில் 24 மணி நேரத்துக்கு பிறகு தான் எதுவும் சொல்ல முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முதலே தி.மு.க தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிய ஆரம்பித்தனர். இரவு முதலே காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
மேலும் இன்று காலை முதலே, மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் பரவியது. அதே நேரம், மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் மூத்த தி.மு.க தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். இதனால் பதற்றம் இன்னும் அதிகரித்தது.
காவேரி மருத்துவமனை அருகே 300 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல மாவட்டங்களில் இருந்து போலீஸார் சென்னைக்கு வர வேண்டும் என சுற்றறிகை காவல் துறையால் விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.