Chennai: திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். இந்நிலையில், அவர் மறைவை ஒட்டி, சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் திரையரங்குகள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து ஆம்னி பஸ் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன், ‘புதன் கிழமையன்று பயணிகள் பதிவு செய்திருந்த 75 முதல் 80 சதவிகித பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எனவே, நாளை மாலை வரை எந்த வெளியூர் பேருந்துகளும் சென்னையிலிருந்து இயக்கப்படாது’ என்று தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1,000 ஆம்னி பேருந்துகளும், 10000 பயணிகளும் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இருக்கும் திரையரங்குகளைப் பொறுத்தவரை, நேற்று இரவு முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இன்றும் எந்த தியேட்டர்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் பணம் திருப்ப அளிக்கப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.