This Article is From Aug 07, 2018

‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!’- திமுக-வினருக்கு மு.க.ஸ்டாலினின் முக்கிய வேண்டுகோள்!

நிலை நிறுத்தி எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடமளித்து விடாமல் அமைதி காக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!’- திமுக-வினருக்கு மு.க.ஸ்டாலினின் முக்கிய வேண்டுகோள்!
Chennai:

தி.மு.க தலைவரும், 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைவால் காலமானார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உயிருக்கு போராடி வந்தவரின் இறுதி மூச்சு இன்று நின்றது. இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார் கருணாநிதியின் மகனும் திமுக-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இதயங்களிலும், கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகளின் உயிர்மூச்சிலும் இரண்டறக் கலந்திருக்கின்ற நம் கழகத் தலைவர் கலைஞர் அவர்களை இழந்து வாடுகின்ற துயரம் மிகுந்த மிகச் சோதனையான காலகட்டத்தில் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் கற்றுத் தந்த ”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகியவற்றை மனதில் உறுதியாக

நிலை நிறுத்தி எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடமளித்து விடாமல் அமைதி காக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நம் உயிரனையத் தலைவரின் உடல்நலன் காக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெரும் முயற்சியை சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து மேற்கொண்டனர். அதன் அடையாளமாக, மருத்துவமனை வளாகத்திலிருந்து கழகத்தினர் அனைவரும் எவ்வித இடையூறும் அசம்பாவிதமுமின்றி கலைந்து செல்ல வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், கழக நிர்வாகிகள் அந்தப் பணியை முன்னின்று மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் மட்டுமல்ல, ராணுவ கட்டுப்பாடு மிகுந்த உடன்பிறப்புகளை கொண்ட இயக்கம் என்பதை நிரூபித்துக் காட்டி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டியது கழகத்தினரின் கடமையாகும். 'என் உயிரினும் மேலான உடன்பிறப்பே' என்று உணர்வோடு ஒலித்த

வார்த்தைகளால் நம்மை காலந்தோறும் இயக்கி, இன்று நம் உயிருடன் கலந்து விட்ட தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நீங்காப் புகழை என்றென்றும் நிலைத்திட செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

.