हिंदी में पढ़ें Read in English தமிழில் படிக்க বাংলায় পড়ুন
This Article is From Aug 08, 2018

கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது! #LiveUpdates

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி ரமேஷ், கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்

Advertisement
இந்தியா ,
Chennai:

லைவ் அப்டேட்ஸ்:

முழு ராணுவ மரியாதையுடன், குடும்பத்தினர் சூழ மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்திய அளவில் பிரபலமான அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்வளையம் வைத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் இருக்கும் அண்ணா சமாதிக்கு வந்தடைந்தது. அவரது குடும்ப உறுப்பினர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அங்கு வந்துள்ளனர்.

ஆர்.ஏ.எஅஃப் ராணுவப் படை, ராஜாஜி இல்லம் முதல் அண்ணா நினைவிடம் வரை அணிவகுத்து நிற்கின்றனர். பெருகி வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மெரினா கடற்கரை நோக்கி புறப்பட்டது. கருணாநிதியின் உடல், அண்ணா நினைவிடத்துக்கு அருகில் புதைக்கப்பட உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் ராஜாஜி இல்லத்துக்கு வந்து, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் வந்தது. இன்னும் சற்று நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவம், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி இல்லத்தில் குவிந்திருந்த தொண்டர்கள், மேடையில் ஏற முயன்றுள்ளனர். அப்போது அவர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், 2 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்டாலின், ‘உயர் நீதிமன்றம் இன்று நல்ல தீர்ப்பை தந்திருக்கிறது. உரிமைகளுக்காக போராடியவர் நம் தலைவர். அவருக்குரிய இட ஒதுக்கீட்டை நீதிமன்றத்தில் நாம் பெற்றுள்ளோம். எவ்வளவு பெரிய சோகத்தில் இருக்கும் நமக்கு கலைஞருடைய கனவு நினைவேறியது என்ற காரணத்தால் மகிழ்ச்சியடைந்திருக்கிறோம். தமிழகத்தில் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் கலைஞருக்கு பெருமை சேர்க்கக் கூடாது என்று திட்டமிட்டனர். ஆனால், அது ஈடேறவில்லை. நானே நேற்று ஆட்சியாளர்களை நேரில் சென்று சந்திக்க நினைத்த போது, என்னைப் போக வேண்டாம் என்றார்கள். மரியாதை குறைந்துவிடும் என்றனர். இருந்தாலும், சென்றேன். ஆனால், அவர்கள் என் கோரிக்கையை மறுத்துவிட்டனர்.

Advertisement

அவர்களின் எண்ணத்தை, உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தவிடுபொடியாக்கி இருக்கிறோம். கலைஞரின் கனவை நிறைவேற்றியுள்ளோம். எனவே, உங்கள் கால்களை பற்றிக் கொண்டு கேட்டுக் கொள்கிறேன், எந்த வித அசம்பாவிதங்களிலும் ஈடுபடாதீர்கள். தலைவரின் இறுதிப் பயணம் சுமூகமாக நடைபெற வேண்டும். உங்களில் ஒருவனாக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று பேசினார். 

கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சந்தனப் பேழை தயாராகி உள்ளது. அதில், 'ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். விரைவில் அவர்கள் ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவர். 

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவானந்தா சாலையில் துவங்கி, பெரியார் சிலையைக் கடந்து, அண்ணா சிலையைத் தாண்டி வாலாஜா சாலை வழியாக அண்ணா நினைவிடத்தை ஊர்வலம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரைக்கால் புறவழிச் சாலைக்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும். அதேபோல கலைஞர் கருணாநிதிக்கு ஒரு வெண்கலச் சிலையும் நிறுவப்படும் என்று கூறியுள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

கருணாநிதியை அடக்கம் செய்ய அண்ணா நினைவிடம் அருகே ஜேசிபி-களை கொண்டு பணிகள் நடந்து வருகின்றன.

கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, திமுக நிர்வாகிகள் அண்ணா நினைவிடத்திற்கு அருகில், அடக்கம் செய்வதற்கு ஏதுவான இடம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர், அவர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மோடியுடன், ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் மாநிலங்களவையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் இரங்கல் செய்தியை வாசித்தனர்.

கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, ராஜாஜி இல்லத்தில் இருந்த மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், ஆ.ராஜா, துரை முருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும் கண்ணீர் விட்டு அழுதனர்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிராக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று இரவு தற்காலி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் விசாரித்தார். மீண்டும் இந்த வழக்கு இன்று காலை விசாரிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி ரமேஷ், கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.

அண்ணா சமாதி அருகே கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்ய தி.மு.க தாக்கல் செய்த மனு காலை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில பதவியில் இருக்கும்போதே காலமான முதலமைச்சர்களுக்கு மட்டுமே மெரினாவில் சமாதி அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது என்ற வாதம் வைக்கப்பட்டது.

பதவியில் உள்ள முதலமைச்சருக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என தி.மு.க தரப்பில் பதில் வாதம் வைக்கப்பட்டது

மெரினாவில் கலைஞருக்கு இடம் மறுக்கும் தமிழக அரசின் செயலுக்கு பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. “இது அரசியல் பழி வாங்கும் செயல்” என தி.மு.க கூறியுள்ளது

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார் என்று தமிழக அரசு அறிவித்தது. 

1988-ம் ஆண்டே அண்ணா நினைவிடம் அருகே 500 மீட்டர் தூரம், சமாதி அமைக்கும் இடமாக அறிவிக்கப்பட்டது. அங்கு கட்டிடம் அமைக்கவே கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி வேண்டும் - தி.மு.க வாதம்

முன்னதாக மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு தடை கோரும் வழக்குகள் இருப்பதால், சட்ட சிக்கலை முன்வைத்து இடம் தர அரசு மறுத்தது. இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால், அரசுக்கு இப்போது சட்டசிக்கல் எதுவும் இல்லை என்று நீதிபதி கருத்து.

Advertisement