This Article is From Dec 18, 2018

''கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக மின்சாரம் திருடிய திமுகவினர்'' - ஜெயக்குமார்

சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

''கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக மின்சாரம் திருடிய திமுகவினர்'' - ஜெயக்குமார்

சென்னையில் நடைபெற்ற கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை, திமுகவினர் மின்சாரத்தை திருடி நடத்தியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தலைமை அலுவலகமான சென்னை தேனாம்பேட்டை அறிவாலயத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில்தான் ராகுல் காந்தியின் பெயரை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்தார்.

இந்த நிலையில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் மின்சாரத்தை திருடி கருணாநிதி சிலை திறப்பு விழாவை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ராயபுரத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு மிகப்பெரிய கட் அவுட்டுகளை திமுகவினர் வைத்தனர். அந்த கட் அவுட்டுகளுக்கு சென்னை மாநகராட்சியில் இருந்துதான் மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை செய்ய அவர்களுக்கு அதிகாரமே கிடையாது. இருந்தாலும் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்துள்ளனர். மின்சாரத்தை திமுகவினர் திருடியுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது திமுகவினர் மின்சாரத்தை திருடியதற்கான ஆதாரம் என்று கூறி வீடியோ ஒன்றையும் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் காண்பித்தார்.

.