சமீப காலமாக ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த கருணாஸ் எம்.எல்.ஏ., முதல்வர் உட்பட பலரையும் விமர்சித்தார். இதேபோல், திமுக சார்பில் நடத்தப்பட்ட மாதிரி சட்டமன்ற கூட்டத்திலும் கலந்து கொண்ட கருணாஸ் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்தார்.
அண்மையில், சபாநாயகருக்கு எதிராக கருணாஸ் சார்பில் சட்டப்பேரவைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், சட்டமன்ற விதி 69-ன்படி அவரை நீக்க வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் தனபால், ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கருணாஸ், தொகுதிப் பிரச்னை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்துள்ளார்.
இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தோல்வியடையும் என்பதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றேன் என்றார். தொடர்ந்து அவரிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்தது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,
என்னுடைய தொகுதிமக்களின் பிரச்னைகளுக்காக முதல்வரை சந்தித்தேன். தொகுதியில் கண்மாய்கள் தூர் வாரப்படாமல் உள்ளன. திருவாடனை தொகுதியில் குடிநீர் பிரச்னை மற்றும் கன்மாய்களைத் தூர் வாருவது தொடர்பாக கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளேன்.
சிவகங்கையில் மருது பாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரிக்கை விடுத்தேன் என்றார். மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்று அவர் கூறினார்.