கரூரில் இன்று மாலை மக்களவைத் தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் நடக்கிறது. மனோகரா கார்னரில் இறுதிக்கட்ட பிரசாரத்தினை நிறைவு செய்வதில் அதிமுக மற்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி, மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் தங்களுக்கு முதலில் வழங்கிய இறுதி கட்ட பிரசார நேர அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி கரூர் துணை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர் விசாரணை நடத்தி காங்கிரஸ் வேட்பாளருக்கு அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட கட்சியினர் திரண்டு சென்று மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பழகனிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிரசார நேரத்தில் பிரசாரத்தை நடத்த அனுமதிக்குமாறு மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, இரு தரப்புக்கும் தேர்தல் அதிகாரி அனுமதி அளித்ததாக தெரிகிறது.
இதனிடையே கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி தனது டிவிட்டர் பதிவில், கரூர் தொகுதியில் நடந்துகொண்டிருப்பது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமல்ல...யுத்தம்.
நமது இறுதிக்கட்ட பிரச்சாரம் திட்டமிட்டபடி மாலை 4- 6 மணிவரை பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடைபெறும். இதற்கான நீதிமன்ற உத்திரவினைப் பெற்றிருக்கிறோம். அதிகாரத்தை விட,அராஜகத்தை விட உண்மை வலிமையானது என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், கரூரில் இறுதி பரப்புரைக்காக ஒரே இடத்தில் திரண்ட அதிமுக - திமுக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, திமுக கூட்டணிக்குக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டிருந்த நாஞ்சில் சம்பத் மீது அதிமுக பிரமுகர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.