This Article is From Aug 04, 2019

காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்! குடிமக்கள் வெளியே இஸ்ரேல் உத்தரவு!!

தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று இஸ்ரேலியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்! குடிமக்கள் வெளியே இஸ்ரேல் உத்தரவு!!

முன்னதாக அமர்நாத் பக்தர்கள் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.

Tel Aviv (Israel):

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் தனது நாட்டு குடிமக்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தலே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- 

தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு இந்தியாவின் வட பகுதியில் இருக்கும் ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. உள்ளூர் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. 
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அசாதாரண சூழல் காஷ்மீரில் நிலவுவதாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் அமர்நாத் பக்தர்கள் உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

ராணுவத்திற்கு வந்த தகவலின்படி தீவிரவாதிகளின் உதவியோடு பாகிஸ்தான் ராணுவத்தினர் அமர்நாத யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து யாத்ரீகர்கள் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதேபோன்று இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது குடிமகன்கள் ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே கடந்த வாரம் காஷ்மீரில் சுமார் 35 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இன்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை நடத்தினார். 

.