காஷ்மீர் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று கூடியது.
New Delhi: காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ரிசர்வ் போலீஸ் பஸ் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி நேற்று தாக்குதல் நடத்தினார்.
இந்த சம்பவத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்ரமணியன், அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன் உள்பட 40 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது. உண்மையை விசாரிக்காமல் தங்களை குற்றம் சொல்வது என்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது.
இதற்கிடையே, கமாண்டோ படையின் உயர் அதிகாரிகள், என்.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு இன்று சம்மன் அனுப்பியது. இதையடுத்து, பாகிஸ்தான் தூதர் சொஹைல் அகமது வெளியுறவு அமைச்சகத்திற்கு வந்தார். அவரிடம் இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் தங்கள் நாட்டில் அந்த அமைப்பு இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பு கூறுகிறது.
மேலும் படிக்க ; தீவிரவாத தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம்