காஷ்மீரில் நிலைமை படிப்படியாக சீரடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Srinagar: பாகிஸ்தான் சதித்திட்டம் தீட்டியபோதிலும் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு உயிர்கூட போகவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஜம்மூ காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370 ரத்து செய்யப்படுவது குறித்தும் ஜம்மூ காஷ்மீர், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்பது குறித்தும் மத்திய அரசு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிவித்தது.
இதற்கு முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. காஷ்மீர் அரசியல் தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை குறித்து காஷ்மீர் மாநில தலைமை செயலர் சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது -
காஷ்மீரில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். திங்களன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும். எல்லைதாண்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் சதித்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்தது. அப்படி இருந்தும் இந்த நெருக்கடியான சூழலில் ஒரு உயிர்கூட மத்திய அரசின் நடவடிக்கையால் போகவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.