காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையால் பாகிஸ்தான் கடுப்பில் உள்ளது.
Islamabad: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடும் அப்செட்டில் இருக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காஷ்மீர் தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விட்டு நாசம் செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வந்தது. அத்துடன் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி தொந்தரவும் கொடுத்தது.
இந்த நிலையில் கடந்த 5-ம்தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், அதனை காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக அமைக்கவும் அறிவிப்பு செய்தது.
இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் ஐ.நா. சபையில் இந்த விவகாரத்தை கொண்டு சென்றது. அங்கு பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில் சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
இதனால் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இந்தியா காப்பாற்றி வருகிறது. இதைப் போன்று சர்வதேச நீதிமன்றத்தை அணுக பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.