This Article is From Aug 28, 2019

''ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்''

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக காஷ்மீரில் மூத்த அரசியல் தலைவர் முகம்மது யூசுப் தாரிகமி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

''ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்''

ஜம்மு காஷ்மீரின் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.

New Delhi:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, தேசிய மாநாட்டுக் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. 

காஷ்மீரில் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை நீக்க வேண்டும் என்று காஷ்மீர் டைம்ஸ் இதழின் ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். மூத்த அரசியல் தலைவர் முகம்மது யூசுப் தாரிகமியை மத்திய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எஸ். அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது. அப்போது, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் மட்டுமே அங்கு சிறப்பு அந்தஸ்தை நீக்க முடியும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளதால், மாநில சட்டமன்றம் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே காஷ்மீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ம்தேதி நீக்கி நடவடிக்கை எடுத்தது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அங்கு சுமார் 50 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

.