அடுத்தடுத்து நிகழும் அதிரடி மாற்றங்களால் காஷ்மீரில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
Srinagar: ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கூடுதலாக 8,000 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சி-17 போக்குவரத்து விமானம் மூலம் துணை ராணுவப்படையினர் ஸ்ரீநகர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறன்றன. ஏற்கனவே கடந்த வாரத்தில் மட்டும், 35,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டு வந்தனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்த மத்திய அரசு இதனை ரகசியமாக வைத்து வந்தது. இதற்காக கடந்த ஒரு வாரமாக பல அதிரடி நடவடிக்கைகளை காஷ்மீரில் மத்திய அரசு செய்து வந்தது.
அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது என்று பொதுவெளியில் தெரிவித்துவிட்டு, அமர்நாத் யாத்திரைக்க வந்த பக்தர்கள் உடனடியாக தங்கள் செந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல உத்தரவிட்டது.
தொடர்ந்து, வெளிமாநில மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட வெளிமாநிலங்களை சேர்ந்த அனைவரும் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தச் சூழலில் நள்ளிரவு முதல் இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் மூத்த அரசியல் தலைவர் சஜாத் லோன் ஆகியோரை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதுதொடர்பாக கொண்டுவரப்பட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. முன்னதாக சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் போராட்டம் வெடிக்கும் என்று காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் காஷ்மீரில் நிலைமை மேலும் பாதிப்பு அடைந்துள்ளது.