இறுதிச் சடங்கில் சிவச்சந்திரனின் மனைவி மற்றும் மகன்.
ஹைலைட்ஸ்
- சிவச்சந்திரனின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது
- விடுமுறைக்கு வந்துவிட்டு கடந்த சனியன்றுதான் பணிக்கு திரும்பினார்
- சிவச்சந்திரனுக்கு ஒரு மனைவியும், 2 வயதில் மகனும் உள்ளனர்
Ariyalur, Tamil Nadu: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு வீர மரணம் அடைந்த சிவச்சந்திரனுக்கு அவரது 2 வயது மகன் சிவமுனியன் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினார். இந்தக் காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
தீவிரவாத தாக்குதலுக்கு பலியான துணை ராணுவத்தினரின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சிவசுப்ரமணியன், அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சிவச்சந்திரனின் உடல் சொந்த ஊரான கார்குடிக்கு கொண்டு வரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அப்போது சிவச்சந்திரனின் 2 வயது மகன் சிவ முனியன் தந்தையின் உடலுக்கு சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினார்.
சிவச்சந்திரனின் மனைவி காந்திமதியும், மகன் சிவ முனியனும் கண்ணீர் மல்க நின்றிருந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. வீர மரணம் அடைந்திருக்கும் சிவச்சந்திரனின் 2-வது பிள்ளையை காந்திமதி கருவில் சுமந்து வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டு கடந்த சனிக்கிழமையன்றுதான் பணிக்கு திரும்பியிருக்கிறார் சிவச்சந்திரன்.
அடுத்த வியாழன் அன்று நடந்த தாக்குதலில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. ஊர்பொதுமக்கள் சார்பாக சிவச்சந்திரனுக்கு கட் அவுட், பேனர்களை வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பாக குடும்பத்திற்கு ரூ. 20 லட்சமும், ஒருவருக்கு அரசுப்பணியும் அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்புதான் சிவச்சந்திரனின் தந்தை சின்னையன் தனது 2-வது மகனை விபத்தில் இழந்தார். இறுதிச் சடங்கின்போது மகனின் ராணுவ உடையை அணிந்து கொண்டு துக்கம் தொண்டையை அடைத்தவாறு சின்னையன் சென்றார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாகத்தான் சிவச்சந்திரனின் குடும்பம் உள்ளது. அவர் துணை ராணுவத்தில் சேரும் வரையில் குடும்பத்தினர் குடிசையில்தான் வசித்து வந்தனர். அவர் கடந்த 2010-ல்தான் துணை ராணுவத்தில் சேர்ந்தார். அவரது இழப்பு குடும்பத்தையும் சொந்த ஊரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க : சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!