புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
ஹைலைட்ஸ்
- புல்வாமா தாக்குதலுக்கு பாக். காரணம் என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது
- தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பொறுப்பேற்றுள்ளது
- 40 வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்
Islamabad: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்துள்ள தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு கைவிரித்துள்ளது. அந்நாட்டை மையமாக கொண்டுதான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் ரிசர்வ் போலீஸ் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொடூரமான முறையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என மத்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தங்களுக்கும் தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் கை விரித்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு அரசு வெயியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
வன்முறையை பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது. அது உலகத்தில் எங்கு நடந்தாலும் அதனை கண்டிக்க பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளது. நடந்தது என்ன என்பதை விசாரிக்காமல் காஷ்மீர் தாக்குதலையும், எங்களையும் தொடர்பு படுத்தினால் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மண்ணில்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருவதாக மத்திய அரசு உறுதிபட குற்றம்சாட்டி வருகிறது.