ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து அமித் ஷாவும் கவர்னர் சத்யபால் மாலிக்கும் ஆலோசனை நடத்தினர்.
Srinagar: உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்ற அமித் ஷா அங்கு பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டார். விமான நிலையம் வந்த அவரை மரபுகளை மீறி கவர்னர் சத்யபால் மாலிக்கும், அவரது ஆலோசகர்களும் நேரில் சென்று வரவேற்றனர்.
முன்பெல்லாம் பிரதமர் வந்தால் மட்டுமே மாநில கவர்னர்கள் நேரில் சென்று வரவேற்பார்கள். அந்த மரியாதை உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீநகருக்கு வந்ததும் உடனடியாக சிவில் அதிகாரிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையின்போது கவர்னர் சத்யபால் மாலிக், உள்துறை ஆலோசகைர் கே. விஜய்குமார், உள்துறை செயலர் ராஜிவ் கவ்பா, தலைமை செயலர் சுப்ரமணியம், வடக்கு பிரிவு ராணுவ தளபதி ரன்பிர் சிங், காவல்துறை மாநில தலைவர் தில்பாக் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புல்வாமாவில் நடந்த தாக்குதலின்போது 40 துணை ராணுவத்தினர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் காஷ்மீரின் பாதுகாப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் உள்துறை அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர்.