This Article is From Feb 23, 2019

காஷ்மீரிகள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்: 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, காஷ்மீரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் என 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரிகள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்: 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 14-ஆம் தேதி ஜம்மூ- காஷ்மீரின், ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவன், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினான். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இத்தாக்குதலுக்கு பின்னர், நாட்டின் பல பகுதிகளில் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களும், இதர மக்களும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக தாரிக் அதீப் என்பவர், உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது, புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், நாடு முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல், அச்சுச்சுறுத்தல், சமூக புறக்கணிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

காஷ்மீர் மக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன. காஷ்மீர் மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுப்பதற்காக, அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கும் எதிரான தாக்குதல், அச்சுறுத்தல், சமூக புறக்கணிப்பு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 

மேலும் படிக்ககாஷ்மீருக்காக தான் எங்கள் போராட்டமே தவீர, காஷ்மீரிகளுக்கு எதிராக அல்ல! - பிரதமர் மோடி
 

.