திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த சங்கர் - கவுசல்யா கடந்த 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து கவுசல்யாவின் பெற்றோரால் சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதில் பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.
இதைத்தொடர்ந்து, கணவனை இழந்த கவுசல்யாவிற்கு மத்திய அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்கியது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்கன் கண்டோன்மெண்டில் இளநிலை உதவியாளராக கவுசல்யா பணிபுரிந்து வந்தார்.
இதனிடையே, அண்மையில் கோவையில் செயல்படும் நிமிர்வு கலையகம் என்ற அமைப்பில் பறை இசை கலைஞராக இருந்த சக்தி என்ற இளைஞரை கவுசல்யா இரண்டாவது திருமணம் செய்தது பெரும் சர்ச்சையானது. பல்வேறு புகார்களின் காரணமாக சக்தி மற்றும் கவுசல்யா இருவரும் நிமிர்வு கலையகம் அமைப்பிற்கு வர தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது குன்னூரில் உள்ள வெலிங்டன் கண்டோன்மெண்டில் இளநிலை உதவியாளர் பணியில் இருந்து உடுமலை கவுசல்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.