This Article is From Jun 22, 2020

உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் கௌசல்யா தந்தையை விடுவித்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் எமிலியாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் கௌசல்யா தந்தையை விடுவித்தது சென்னை உயர்நீதிமன்றம்!

உடுமலையில் 2016-ல் நடந்த சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை என தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கில், தற்போது கௌசல்யாவின் தந்தையை விடுதலை செய்து   நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மரண தண்டனை வழங்கப்பட்ட மற்ற 5 பேரின் தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் எமிலியாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பினை வரவேற்பதாக கௌசல்யாவின் தாயார் தெரிவித்துள்ளனர்.

வழக்குப் பின்னணி:

திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்தார். இதனால், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பழனி மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் (எ) கலைதமிழ்வாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் மற்றும் பட்டிவீரன்பட்டி மணிகண்டன் என 11 பேர் மீது உடுமலை காவல்துறை, கூலிப்படை வைத்து கொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.

அதில் முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி குற்றவாளிகள் ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன் , பி.செல்வக்குமார் , தமிழ் (எ) கலைதமிழ்வாணன் , மதன் (எ) எம். மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார். கூட்டு சதி, வன்கொடுமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் 6 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜூக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்தும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டி மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

இதில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி , தாய்மாமன் பாண்டித்துரை , கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்து திருப்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

.