பிரதமர் மோடி நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர்.
ஹைலைட்ஸ்
- ஊரடங்கை பின்பற்றாவிட்டால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படும்
- தெலுங்கானாவில் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
- அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த ராணுவம் அழைப்பு
New Delhi: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் ஒழுங்காகப் பின்பற்றாவிட்டால், கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவு 12 மணி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ‘அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டது. எனவே, மக்கள் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், 24 மணி நேர ஊரடங்கை விதிக்க வேண்டிவரும்.
மேலும் தேவையின்றி நடமாடுவோரைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடாது என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்' எனச் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.
மேலும், ஐதராபாத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மற்றும் அதிகாரிகளும் ”வீதிகளுக்கு வர வேண்டும்” என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்."எந்த வகையிலும், ராணுவத்தைக் கொண்டுவருவதற்கான நிலைமையோ, 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தக்கூடிய நிலைமையோ வந்துவிடக்கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், அதிக விலைக்குப் பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
"மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதனால், எந்தவொரு நபரும் அந்நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏதேனும் அவசரம் என்றால், 100க்கு அழைத்து போலீசரிடம் உதவிக்கு அணுகவும். மாலை 6 மணிக்குள் கடைகள் மூடப்பட வேண்டும், ஒரு நம்மிடம் தாமதமானால் கூட அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கட்டுப்பாட்டை மீறினால், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவில் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. மேலும், 19,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின் படி, இந்தியாவில் 530க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.