புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற நிலையில் நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டமாகும்.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5வது பொது கூட்டம் ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெறுகிறது. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாக கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில், மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிகிறது. மாநிலத்திற்கு எந்த நிதி பலனையும் நிதி ஆயோக் தராததால், கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார்.
பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே பேச அனுமதிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், இந்த நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று மாலை சந்தித்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தினார்.
இதேபோல், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். பாஜக கூட்டணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை முதலமைச்சர் சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு, வறட்சியை மேற்கொள்வது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, நாட்டின் பாதுகாப்பு, இடதுசாரி பயங்கரவாதம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
(With inputs from PTI and ANI)