மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி இன்னும் பெறவில்லை என்கிறார் கே.டி. ராமா ராவ்.
New Delhi: மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவுக்கு உண்டு என்று அவரது மகன் ராமா ராவ் கூறியுள்ளார்.
தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சியின் தலைவருமான கே. சந்திர சேகர ராவை, கே.சி.ஆர். என்றும், அவரது மகன் கே.டி. ராமாராவை, கே.டி.ஆர். என்றும் அழைத்து வருகின்றனர். இந்தநிலையில், ராமா ராவ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டியில் கே.டி.ஆர். கூறியதாவது-
தெலங்கானாவில் உள்ள 16 மக்களவை தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றாலே போதும் மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் மாறி விடுவோம்.
காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு காங்கிரஸ் தவறி விட்டது. நாடு முழுவதும் மக்களிடம் பாஜக மதிப்பை இழந்து வருவதை பார்க்கலாம். எனவேதான் இந்த மக்களவை தேர்தல் மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்த இரு கட்சிகளும் பெரும்பான்மை பெறாது. நாங்கள் 16-ல் வெற்றி பெற்று விட்டால் நாங்கள் சொல்பவர்கள்தான் மத்தியில் ஆட்சியை அமைப்பார்கள். எனது தந்தை கே.சி.ஆர். மத்தியில் கூட்டாட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
எனவே, தெலங்கானா மக்கள் 16 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றியைத் தந்து விட்டால், மாநிலத்திற்கு மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய அனைத்து உதவிகளையும் பெற்றுத் தந்து விடுவோம். இவ்வாறு கே.டி.ஆர். கூறினார்.
மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத அரசை ஏற்படுத்த தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரை கே.சி.ஆர். சந்தித்து பேசியுள்ளார்.