This Article is From May 07, 2019

“1996 ஃபார்முலா”- தெற்கிலிருந்து ஒரு பிரதமர்- கே.சி.ஆர்-ன் பலே திட்டம்!

Election 2019: நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். 

“1996 ஃபார்முலா”- தெற்கிலிருந்து ஒரு பிரதமர்- கே.சி.ஆர்-ன் பலே திட்டம்!

பினராயி விஜயனைப் பார்த்த கே.சி.ஆர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோருடனும் இது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்

ஹைலைட்ஸ்

  • கே.சி.ஆர், பினராயி விஜயனை சந்தித்துப் பேசினார்
  • 'மூன்றாவது அணிக்கு' கே.சி.ஆர் முயன்று வருகிறார்
  • மு.க.ஸ்டாலினையும் அவர் சந்திக்க உள்ளார்
New Delhi:

தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்), மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சியமைக்க வேண்டும் என்ற தனது திட்டத்தை மீண்டும் தூசித் தட்டி எடுத்துள்ளதாக தெரிகிறது. அவர் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சென்று சந்தித்து, தனது திட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. கே.சி.ஆரின் இந்தத் திட்டம் “1996 ஃபார்முலா” என ஆழைக்கப்படுகிறது. 

1990-களில் மத்தியில், 3 பேர் கூட்டணி வைத்து பிரதமர்களாக பதவியேற்றனர். கூட்டணி ஆட்சி என்பதால், மூன்று பேரது ஆட்சிக்காலமும் நெடுநாள் நிலைக்கவில்லை. ஆனால், அந்த யுக்தியைப் பயன்படுத்தி காங்கிரஸ், பாஜக அல்லாத மற்ற பிராந்தியக் கட்சிகளை ஒன்றிணைத்து, மீண்டும் “1996 ஃபார்முலாவை” அமல் செய்ய பார்க்கிறார் கே.சி.ஆர். முக்கியமாக தென்னிந்தியாவில் இருந்து ஒருவரை பிரதமராக அமர்த்தும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளதாக தெரிகிறது. 

பினராயி விஜயனைப் பார்த்த கே.சி.ஆர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோருடனும் இது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். மே 13 ஆம் தேதி, ஸ்டாலினை கே.சி.ஆர், நேரில் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

7 கட்டங்களாக நடந்து வரும் மக்களவை தேர்தல், மே 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். 

பினராயி விஜயனை சந்தித்த கே.சி.ஆர், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரிகளை எதிர்த்துப் போட்டியிடுவதை சுட்டிக்காட்டியுள்ளார். வயநாட்டில் பாஜக நேரடியாக களம் இறங்காததையும், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் நேரடியாக மோதுவதையும் அவர் எடுத்துக் கூறியுள்ளார். கே.சி.ஆரின் அனைத்து கருத்துகளையும் கேட்டுக் கொண்ட பினராயி விஜயன், ‘எங்கள் கட்சி மேலிடம் இது குறித்து முடிவு செய்யும்' என்று மட்டும் தற்போதைக்கு சூசகமாக சொல்லி அனுப்பி வைத்துள்ளாராம். 

கே.சி.ஆரின் இந்த முன்னெடுப்புக்கு காரணம், காங்கிரஸோ பாஜகவோ, தற்போது தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை மட்டும் வைத்து அரசமைக்க முடியாது என்று அவர் நம்புகிறாராம். 

மூன்றாவது அணி கோரிக்கையை முன் வைத்து கே.சி.ஆர், முன்னரே பல பிராந்தியக் கட்சிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகியோர், கே.சி.ஆரை சந்திக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கே.சி.ஆரை சந்தித்திருந்த போதும், அவர்களும் ‘மூன்றாவது அணி' திட்டத்துக்கு பிடிகொடுக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனால், தொடர்ந்து தனது முயற்சியை கைவிடாமல் முனைப்பு காட்டி வருகிறார் சந்திரசேகர் ராவ்.

இது ஒரு புறமிருக்க, கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கே.சி.ஆர் எடுத்துள்ளார். இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ், ‘தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக-வின் பி-டீம்' என்று விமர்சனம் செய்து வருகிறது. 

தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாத வகையில் இருப்பதால், கே.சி.ஆரும் ஒரு பக்கம் காய் நகர்த்தி வருகிறார். மே 23-ல் அனைத்துக்கும் விடை கிடைத்துவிடும்.

.