சில நாட்களுக்கு முன்னர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை, ராவ் நேரில் சென்று சந்தித்தார்
New Delhi: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கடந்த சில நாட்களாக பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறார். இதையொட்டி, அவர் பல்வேறு மாநில முதல்வர்களை தொடர்ந்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோரை டெல்லியில் சந்தித்து 3வது அணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் கே.சி.ஆரை பார்க்க மறுத்திருப்பது பல்வேறு வகைகளில், ராவின் கனவுத் திட்டத்துக்கு முடக்கு போட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பக்கின்றன.
தெலங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது. தேர்தல் முடிந்ததை அடுத்து கே.சி.ஆர், ‘மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு என்னால் ஆன அனைத்து விதத்திலும் முயற்சி மேற்கொள்வேன்' என்று சூளுரைத்தார்.
‘டெல்லியில் இருக்கும் கே.சி.ஆரை, மாயாவதியும் அகிலேஷும் சந்திப்பார்கள்' என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி தெரிவித்திருந்தது. ஆனால் அகிலேஷ், ‘தற்போது நான் இருக்கும் சூழலில் கே.சி.ஆரை டெல்லியில் சந்திக்க முடியவில்லை. ஆனால், நான் விரைவில் ஐதராபாத் சென்று அவரை சந்திப்பேன்' என்று மட்டும் கூறியுள்ளார். மாயாவதியும், ராவை சந்திப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை, ராவ் நேரில் சென்று சந்தித்தார். இருவரை சந்தித்தப் பிறகும், அவர்களுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி கொடுத்தார் சந்திரசேகர் ராவ். அப்போது பட்நாயக்கும், பானர்ஜியும் மூன்றாவது அணி குறித்து எந்தவித கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கே.சி.ஆரின் தொடர் முயற்சிகளுக்கு காங்கிரஸ் தரப்பு, ‘நாங்கள் முதலில் இருந்தே சந்திரசேகர் ராவ், பாஜக-வின் மாற்று அணி என்று தெரிவித்து வருகிறோம். தற்போது அவர் எடுக்கும் இந்த 3-வது அணி முயற்சியால், பாஜக-தான் அதிக பயனடையும்' என்று விமர்சித்துள்ளது.
அதே நேரத்தில் பாஜக தரப்போ, ‘காங்கிரஸ் தலைமையை எதிர்கட்சிகள் ஏற்க தயக்கம் காட்டுவதே, 3வது அணி உருவாவதற்கு அடிப்படை. பாஜக-வுக்கு எதிராக எந்த வித வலுவான அணியும் உருவாக வாய்ப்பில்லை' என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.