குகையில் பிரதமர் மோடி தியானம் செய்யும் காட்சி
Dehradun: உத்தர காண்டில் பிரதமர் மோடி தியானம் செய்த குகை சுற்றுலாத் தலமாக மாற்றப்படவுள்ளது. இங்கு செல்வதற்கான ஆன்லைன் புக்கிங் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் பிரசாரம் முடிந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர உத்தரகாண்டின் கேதார்நாத்தில் உள்ள குகை ஒன்றில் கடந்த சனிக்கிழமை தியானத்தை தொடங்கினார். அவரது தியானம் 17 மணி நேரம் நீடித்தது.
இந்த குகையில் மோடிக்கு பல வசதிகள் செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இதனை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கிண்டல் செய்திருந்தனர். இந்த நிலையில், மோடி தியானம் செய்த குகை சுற்றுலாத் தலமாக மாற்றப்படவுள்ளது. அந்த குகையை 'மோடி குகை' என்றே மக்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர். மோடி தியானம் செய்த குகை 12 ஆயிரம் அடி உயர மலையில் அமைந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கர்வால் மண்டல் விகாஸ் நிகாம் என்ற அரசு அமைப்புதான் சுற்றுலா மேம்பாட்டை கவனிக்கிறது. மோடி தியானம் செய்த குகை குறித்து இந்த அமைப்பின் பொது மேலாளர் பி.எல். ராணா கூறியதாவது-
பிரதமர் மோடி தியானம் செய்த குகை மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறது. இதனை மோடி குகை என்றுதான் அழைக்கிறார்கள். இந்த குகை விரைவில் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து மக்கள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
மோடி தங்கியிருந்த அறை ஒன்றும் ஆடம்பரமானது அல்ல. ஒரேயொரு படுக்கை, குளிப்பதற்கு வாளி, கப் ஆகியவை மட்டுமே இருந்தன. குகையில் மின்சார வசதி உண்டு. ஆனால் மொபைல் போன் நெட் ஒர்க் அங்கு செயல்படாது. முன்பு குகையில் தியானம் செய்வதற்கு ரூ. 3 ஆயிரம் என நிர்ணயித்திருந்தோம். தற்போது அந்த தொகை ரூ. 990 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.