ஹைலைட்ஸ்
- ஆம் ஆத்மி கட்சிகள் மீது இருக்கும் வழக்குகளை சிபிஐ விசாரிக்கிறது
- இதையொட்டித் தான் கெஜ்ரிவால் சிபிஐ மீது குற்றம் சுமத்தியுள்ளார்
- பாஜக மற்றும் டெல்லி ஆளுநர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், `சிபிஐ, அமித்ஷாவுக்கும் மோடிக்கும் அடிபணிந்து நடக்கிறது' என்று காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி புரிந்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக-வுக்கும் தொடர்ந்து பல்வேறு தளங்களில் மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், சிபிஐ ஆம் ஆத்மி கட்சியினர் மீது தொடக்கப்பட்டிருக்கும் வழக்குகளில் மும்முரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கெஜ்ரிவால், 'சிபிஐ, எங்கள் கட்சியினர் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்புகின்றனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றால் எங்களை அதிக நேரம் காக்க வைக்கின்றனர். பாஜக-வும் டெல்லியின் துணை நிலை ஆளுநரும் சிபிஐ மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவை எங்களுக்கு எதிரான வகையில் பயன்படுத்துகின்றனர். சிபிஐ பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அடிபணிந்து நடக்கிறது. இதற்கு முன்னர் சிபிஐ-யிடம் நிலுவையில் இருக்கும் வழக்குகள் விசாரிக்கப்படுவதில் சுணக்கம் காட்டப்படுகிறது. ஆனால், எங்கள் வழக்குகளில் அவர்கள் அதீத மும்முரம் காட்டி வருகின்றனர். என் வீட்டிலும் என் கீழ் இருக்கும் அமைச்சர் வீட்டிலும் தொடர்ந்து சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. ஆனால், எங்களில் ஒருவரைக் கூட அவர்களால் கைது செய்ய முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் கரை படியாதவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், எங்கள் பெயரை களங்கப்படுத்துவே இப்படி செய்கின்றனர். எங்கள் வேலையை தடுக்குவே இந்த அனைத்து செயலும் செய்யப்படுகிறது. பிரதமர் என்பவர் ஒரு நாட்டுக்கு தந்தை போன்றவர். அவர் மக்களை காப்பாற்ற வேண்டும். மாறாக அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது' என்று அடுக்கடுக்கான விமர்சனத்தை பாஜக மீதும் மோடி மீதும் வைத்துள்ளார்.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)