This Article is From Jul 12, 2019

ரூ.200 கடனை அடைக்க 22 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வந்த கென்ய எம்.பி; நெஞ்சை உருக்கும் கதை!

ரிச்சர்டு நியாகாகா தோங்கி என்னும் இன்னாள் கென்ய எம்.பி, மகாராஷ்டிராவில் இருக்கும் மவுலானா அசாத் கல்லூரியில், 1985 முதல் 1989 வரை மேலாண்மைத் துறையில் பட்டம் பயின்றார்.

ரூ.200 கடனை அடைக்க 22 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வந்த கென்ய எம்.பி; நெஞ்சை உருக்கும் கதை!

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்த 200 ரூபாய் கடனால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் தோங்கி.

Aurangabad:

கென்யாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்தியர் ஒருவரிடம், 22 ஆண்டுகளுக்கு முன்னர் செலுத்த வேண்டிய 200 ரூபாய் கடனை, மீண்டும் வந்து அடைத்துள்ளார். 

ரிச்சர்டு நியாகாகா தோங்கி என்னும் இன்னாள் கென்ய எம்.பி, மகாராஷ்டிராவில் இருக்கும் மவுலானா அசாத் கல்லூரியில், 1985 முதல் 1989 வரை மேலாண்மைத் துறையில் பட்டம் பயின்றார். அப்போது அவர் அவுரங்காபாத் நகரத்துக்கு அருகில் உள்ள வாங்கடேநகர் பகுதியில் தங்கியிருந்தார். அதே இடத்தில் மளிகைக் கடை வைத்திருந்தவர், காசிநாத் காவ்லி. 

இந்தியாவில் தோங்கி படித்தபோது, காவ்லிதான், அவருக்கு உணவளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் காவ்லி கொடுத்த உணவுக்கு தோங்கியிடம் பணம் இல்லாமல் போனது. தோங்கியும் படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்பிவிட்டார். தொடர் உழைப்பினால் அவர், கென்ய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றார். 

ஆனால், சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்த 200 ரூபாய் கடனால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் தோங்கி. அந்த சமயத்தில்தான், “திருமணம் முடிந்த பின்னர், இந்தியாவுக்குச் சென்று கடனை அடைக்க வேண்டும்” என்று உறுதி பூண்டுள்ளார்.

தனது இந்தியப் பயணம் குறித்து தோங்கி கூறுகையில், “22 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கிருந்த கடனை திரும்ப செலுத்தாமலேயே இருந்தேன். திருமணம் முடிந்த பின்னர் இந்தியாவுக்கு வந்து அதை அடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது என் மனது அமைதியடைந்துள்ளது.

அவுரங்காபாத்தில் மாணவனாக கல்வி பயின்றபோது, பல இன்னல்களால் அவதிப்பட்டு வந்தேன். மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு, காவ்லியும் அவரது குடும்பத்தினரும்தான் உதவி செய்தனர். அவர்களுக்கு நான் கண்டிப்பாக மீண்டும் வந்து நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். 

நான் மீண்டும் வந்தபோது, வெளியே போய் சாப்பிடலாம் என்று காவ்லி சொன்னார். நாங்கள், அவர்கள் வீட்டில்தான் சாப்பிடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம். அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

தோங்கி, தான் படித்த கல்லூரிக்குச் சென்று, அங்கிருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் காவ்லி, சீக்கிரமே கென்யாவுக்கு வர வேண்டும் என்றும் அன்புக் கட்டளை இட்டுள்ளார் தோங்கி.

.