ஆசிரமத்திற்கு சொந்தமான இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது
Thiruvananthapuram: அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற மதகுருவால் நிறுவப்பட்ட கேரள ஆசிரமம் ஒன்றிற்கு நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.
ஆசிரமத்திற்கு சொந்தமான இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்திற்கு நள்ளிரவு 2.30 மணி அளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல்காரர்கள் ஆசிரமத்திற்கு முன் ஒரு மலர் மாலையையும் வைத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, வெள்ளை நிற ஆம்னி மற்றும் ஹோண்டா சிஆர்வி ரக கார்கள் தீவைக்கப்பட்டுள்ளது என்றும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை ஆசிரமத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், கருத்தியல் ரீதியாக கையாள முடியாதவர்களே இது போல் தாக்குதலில் ஈடுபடுவார்கள். சுவாமிகளின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாத நபர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். யாராக இருந்தாலும் சட்ட ஒழுங்கை தங்கள் கையில் எடுக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள நிதியமைச்சர் ஐசக் தாமஸ் கூறும்போது, இந்த சம்பவத்தை கொலை முயற்சியாகவே பார்க்க வேண்டும். சபரிமலை தீர்ப்பில் சங் பரிவாரின் நிலைப்பாட்டை சுவாமி சந்தீப்பானந்தா தீவிரமாக எதிர்த்து வந்தார். தாக்குதலுக்கு உட்பட்ட இந்த ஆசிரமத்திலே சுவாமிகளும் மற்றும் சிலரும் வசித்து வருகின்றனர். ஆசிரமத்தில் தீவைக்கப்பட்டது குறித்து வெளியில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தே சுவாமிகளுக்கு தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து செயல்பட்டு பெரும் விபத்துகளை தவிர்த்துள்ளனர் என்று அவர் கூறினார்.