கனமழையால் வயநாட்டில் தேயிலை தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Thiruvananthapuram: கேரளாவில் ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவில் குறைந்தது 40 பேராவது சிக்கியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை உயிருடன் மீட்பதற்கு மீட்பு படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் எர்ணாக்குளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து இங்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோன்று ஆலப்புழா, கோட்டயம், திரிச்சூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை வயநாடு மாவட்டத்தில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் குறைந்தது 40 பேராவது சிக்கியிருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல் குறித்து முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை நடத்தினார். அரசு அளித்துள்ள தகவலின்படி வெள்ளத்தில் இதுவரைக்கும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காணாமல் போயுள்ளனர். 64 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 738 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
உதவிக்காக 24 மணிநேரமும் செயல்படும் கன்ட்ரோல் ரூமை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. வெள்ள பாதிப்பு தொடர்பாக 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.