Citizenship (Amendment) Act: தனது மனுவில் கேரளா குறிப்பாக, சிஏஏ சட்டப் பிரிவு 14, 21 மற்றும் 25-க்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளது
ஹைலைட்ஸ்
- Citizenship Act-க்கு எதிராக முன்னரே 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
- கேரளா, முதல் மாநிலமாக சிஏஏவுக்கு எதிராக வழக்கு போட்டுள்ளது
- கேரளா,தனது சட்டமன்றத்திலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
New Delhi: குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன்னரே சுமார் 60 மனுக்கள் சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தாலும், ஒரு மாநில அரசு இப்படி செய்வது இதுவே முதன்முறையாகும்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது மனுவில், கேரள அரசு, சிஏஏ இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் பல பிரிவுகளை மீறுவதாகவும், அனைவருக்கும் சம உரிமை என்பதை மறுப்பதாகவும், நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் (திருத்தம்) ஆணையை எதிர்த்து கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நாட்டில் வாழ அனுமதி கொடுக்கப்படும்.
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து மத ஒடுக்குமுறையால் இந்தியாவுக்கு வந்த, முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது என்றும் மதப் பாகுபாடு காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன.
சிஏஏவுடன் தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சியும் இணைந்தால், அது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மாறும் என்று இந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்தச் சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருக்கும் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை கொடுக்க உதவும் என்கிறது மத்திய அரசு தரப்பு.
இப்படிப்பட்ட சூழலில்தான் கேரள அரசு, சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. தனது மனுவில் கேரளா குறிப்பாக, சிஏஏ சட்டப் பிரிவு 14, 21 மற்றும் 25-க்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளது.
சட்டப் பிரிவு 14, அனைவருக்கும் சம உரிமையை கொடுக்கிறது. சட்டப் பிரிவு 21, “சட்டப்படி அல்லாமல் எந்த ஒரு தனி நபரின் வாழும் உரிமையோ அல்லது தனிப்பட்ட சுதந்திரமோ பறிக்கப்படாது” என்கிறது. சட்டப் பிரிவு 25, “அனைத்து குடிமக்களும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை பின்பற்றலாம்” என்கிறது.
பல பாஜக ஆதரவுக் கூட்டணிக் கட்சிகளுமே, தாங்கள் ஆளும் மாநிலங்களில் என்ஆர்சி-ஐ அமல் செய்ய முடியாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.