பிரதமர் நரேந்திர மோடிக்குக் கேரள கத்தோலிக் பிஷப்களின் திருச்சபைக் கூட்டம் கடிதம் எழுதியுள்ளது
Thiruvananthapuram: சர்ச்களில் பாவமன்னிப்பை ஒழிக்கக்கோரும் தேசிய மகளிர் ஆணையத்தின் சர்ச்சைக்குரிய பரிந்துரை, கேரள கத்தோலிக் உயர் அமைப்புகளிடையே கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் இந்த பரிந்துரைக்குப் பின்னணியில் உள்நோக்கம் இருக்கலாம் என்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம் மறை மாகாணத்தின் ஆர்க் பிஷப் சூசா பாக்கியம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். “பிரதமரும் இவ்வரசின் பிற தலைவர்களும் அவ்வப்போது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பேணுவதில் உறுதியாக உள்ளதாகவும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினர். ஆனால் நடைமுறையில் ரேகா சர்மா தெரிவித்த பரிந்துரைகளைப் பார்க்கும்போது இதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அதனை பொதுவில் அனைவரும் அறியும்படி சுட்டிக்காட்ட வேண்டியதாகவும் இருக்கிறது என்றார். மேலும் ரேகா சர்மாவின் பரிந்துரை பொறுப்பற்றது. மக்களிடையே வேற்றுமையை உண்டாக்கி, அந்தப் பிளவில் சிறுபான்மையினரிடையே அமைதியை சீர்குலைப்பதே இதன் நோக்கம்” என்றும் அவர் சாடினார்.
கேரளாவில் பாவமன்னிப்பு ரகசியத்தை வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டி 34 வயதான ஆசிரியையை நான்கு பாதிரியார்கள் பல ஆண்டுகளாக வன்புணர்ந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா இது பற்றிக் கூறுகையில், “இது வெளிவந்துள்ள ஒரு நிகழ்வு. இன்னும் பல இடங்களில் இதுபோன்று நடந்து கொண்டு தான் இருக்கிறது. பாவமன்னிப்பு பெண்களை மிரட்டி வல்லுறவு கொள்ள ஏதுவாக வழிவகை செய்கிறது. இம்முறை ஒழிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்.
இதையடுத்து கேரள கத்தோலிக் சர்ச் அமைப்பு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “இது கிறித்தவ நம்பிக்கையின் மீதும் வழக்கங்களின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இந்த பரிந்துரைகளை ஏற்கக் கூடாது. இது அரசியலமைப்புச் சட்டதுக்கு எதிரான முறையில் சர்ச்சின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும். பல நூற்றாண்டு காலமாக தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கத்தின் அறவியல், இறையியல், உளவியல் பரிமாணங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ரேகா சர்மா இவ்வாறு பரிந்துரைத்துள்ளார். கிறிஸ்தவ நம்பிக்கையில் பாவமன்னிப்பு ஒரு புனிதச் சடங்காகும். அது ஆன்மிகக் கரையேற்றத்துக்கான பாதை. பழமையான கிறிஸ்தவச் சமூகங்களில் பின் பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை. கிறிஸ்தவ வரலாற்றில் இப்பாவமன்னிப்பின் புனிதத்தைக் காப்பதற்காக பல பாதிரியார்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர்.” என்று சர்ச் தரப்பில் கூறப்பட்டுள்ளது.