காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியைக் காண கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று நேரில் வந்தார். அப்போது அவர், ‘பிறவியிலேயே போராளி கருணாநிதி’ என்று புகழாரம் சூட்டினார்.
திமுக தலைவரும் 5 முறை முதலமைச்சராகவும் இருந்த கருணாநிதி கடந்த சில நாட்களாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். முன்பிருந்ததைவிட அவரது உடல்நிலை தற்போது தேறியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ள நிலையிலும், மருத்துவமனை வளாகத்துக்கு வெளியில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் தொடர்ந்து காத்திருந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் அவரை நேரில் பார்த்து நலம் விசாரிக்க பினராயி விஜயன் வருகை தந்திருந்தார்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், ‘கருணாநிதி பிறவியிலேயே போராளி ஆவார். இப்போதும் கூட அவரின் தீர்க்கம்தான் வெற்றியடைந்துள்ளது. அவரது உடல்நிலை முன்னேறியுள்ளது. ஸ்டாலின், கனிமொழி,ம் பிற குடும்ப மற்றும் கட்சி உறுப்பினர்கள், என்னிடம் கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதாக தெரிவித்தனர். அவர் சீக்கிரமே பூரண குணமடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.