கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார்
Kochi: கேரளா கான்வெண்டில், கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 13 முறை கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் பிராங்க்கோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்கள் ஆகியும், வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய விடுதியில் உள்ள மற்ற கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை, பிஷப் பிராங்க்கோ, பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அச்சமும், அவமானமும் இருந்ததால், நான் வெளியே சொல்லவில்லை. தற்போது நான் புகார் கொடுத்த பிறகும், இது குறித்து திருச்சபை நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கேரள காவல் துறையினரின் விசாரணையில், கன்னியாஸ்திரி தெரிவித்த தேதிகளும், பிஷப் கூறிய தேதிகளும் முரண்பாடாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப், நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்படுவார் என்று கேரளா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில், பிஷப் பிராங்க்கோவிற்கு எதிரான புகாரை திரும்பப் பெற்றால் 5 கோடி ரூபாய் பணம் தருவதாக பிஷப்பின் உறவினர் தெரிவித்தாக பாதிக்கபட்ட கன்னியாஸ்திரியின் சகோதரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், இந்த வழக்கு விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைக்க உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் பிஷப்புக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்ததை தொடர்ந்து அவரை கைது செய்வதற்கான உத்தரவை கேரள போலீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.