ஐந்து இலட்சம் மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
Thiruvananthapuram: கேரளத்தில் வெள்ளம் வடிந்து வரும் நிலையில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள 10.40 இலட்சம் மக்களின் மீதும் வெள்ளத்தில் வீடிழந்தோரின் வீடுகளை மறுகட்டமைப்பதிலும் அரசின் கவனம் திரும்பியுள்ளது.
உலகெங்கிலும் இருந்து ஏற்கனவே முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பணமும் நிவாரணப்பொருட்களும் குவிந்து வருகின்றன. நேற்று இரவு நிலவரப்படி, முதல்வர் நிவாரண நிதிக்கு 539 கோடி வந்துள்ளது.
வெள்ளம் வடிந்து வருவதால் ஐந்து இலட்சம் மக்கள் முகாம்களில் இருந்து கடந்த சில நாட்களில் வீடுகளுக்குத் திரும்பிவிட்டாலும், மேலும் 10.40 இலட்சம் மக்கள் 2770 முகாம்களில் உள்ளனர்.
எனினும் வீடுகளுக்கு திரும்பிய மக்கள் ஒரு பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். வீடுகள் முழுக்க சேறும் சகதியுமா இருக்கிறது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் வீடுகளில் உள்ளன.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆலப்புழா, எர்ணாகுளம், பத்தணம்திட்டா, திரிச்சூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களை நேற்று பார்வையிட்ட முதல்வர் பிணராயி விஜயன், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் மாநிலத்தை மறுகட்டமைப்பதிலுமே தற்போதைக்கு அரசின் கவனம் உள்ளது. 37,000க்கும் மேற்பட்ட கிணறுகளும் 60,000க்கும் மேற்பட்ட வீடுகளும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. நோய்ப்பரவல் ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால் இறந்த கால்நடைகளின் உடல்களையும் அப்புறத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைக்க வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படும்" என்றார்.
மேலும், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்து இம்முறை ஓணத்தைக் கொண்டாடுங்கள்" என்றும் கேரள மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வார இறுதிக்குள் வீடுகள், பொது இடங்கள் சுத்தம் செய்யப்படும். இதற்காக வார்டு அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.