ஹைலைட்ஸ்
- Centre is under attack by Opposition for refusing foreign aid for Kerala
- But KJ Alphons today said he will appeal for policy change
- "I have seen the misery. We need the money," he said
New Delhi: “வெளிநாடுகளிடம் இருந்து உதவி பெறுவதில்லை என்னும் முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இருந்து பின்பற்றி வரும் கொள்கையை மாற்றிக்கொள்ளுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்” மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். “2004 முதல் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் அரசின் கொள்கையாக இது இருக்கிறது. சுனாமியில் இருந்து உத்தராகண்ட் வெள்ளம் வரை எல்லா சூழ்நிலைகளிலும் இது தொடர்ந்துள்ளது. இருப்பினும் எனது மாநிலத்துக்காக அதை மாற்றிக்கொள்ள நான் கோருவேன். ஏனென்றால் கேரளத்தின் துயரை நான் கண்டிருக்கிறேன். எங்களுக்குப் பணம் வேண்டும்” என்று கடந்த பத்து நாட்களாக வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு மதிப்பிட்டு வரும் அல்போன்ஸ் கூறியிருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் நிதி உதவியை மத்திய அரசு ஏற்க மறுத்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நேற்று இதுதொடர்பாக அதிகார்வபூர்வமாகவே இந்திய அரசு, “தற்போது பின்பற்றி வரும் கொள்கையின்படி, வெளிநாடுகளின் உதவியைப் பெறுவதில்லை; நிவாரணங்களுக்குத் தேவையான நிதியை உள்நாட்டு முயற்சிகளின் மூலமே திரட்டுவது என்பதில் அரசு உறுதியாக உள்ளது” என்று தெளிவுபடுத்தியுள்ளது. வெளிநாடுகளின் உதவும் மனப்பான்மையை மெச்சும் அதே வேளையில் அதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள மத்திய அரசு, “இருந்தாலும் பிரதமர், முதல்வர் நிவாரண நிதி கணக்குக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நிதி அளிப்பதை வரவேற்கிறோம்” என்று அறிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. “அரசின் கொள்கை தானும் படுக்காது தள்ளியும் படுக்காத கதையாக உள்ளது (dog in the manger policy)” என்பதற்கு இணையான ஆங்கில மரபுத்தொடரைக் கூறி கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசாக் மத்திய அரசினை ட்விட்டரில் விமர்சித்துள்ளார். மத்திய அரசு இதுவரை ரூ.760 கோடியினை உடனடி மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக கேரள அரசிடம் அளித்துள்ளது. தற்போதைக்கு நிவாரணப் பணிகளுக்குத் தேவைக்கு அதிகமாகவே கேரள அரசிடம் பணம் உள்ளது. அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதை அம்மாநில முதல்வர் பிணராயி விஜயனும் ஒப்புக்கொள்கிறார். “மேலும் பணம் எதற்குத் தேவை என்றால்… மக்களை அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப தேவை. கேரளத்தை மறுகட்டமைக்க தேவை. ஒவ்வொரு வீட்டையும் சீர்ப்படுத்திக் கட்டவேண்டியுள்ளது. இதற்கெல்லாம் நிதி எங்கே இருக்கிறது? இதற்கு நிறைய நிதி தேவையாக உள்ளது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.