மூன்று கிலோ எடையுள்ள தங்களது குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது என்று மிகக் கவனமாகப் பிடித்துக்கொண்டு வந்துள்ளனர்
Thiruvalla, Kerala: கேரளத்தில் உள்ள மேப்ரல் என்னும் கிராமத்தில் வசிப்பவர் ஹெலன் மொபின். மருந்தாளுநராகப் பணிபுரிந்து வருகிறார். கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தனது ஏழு மாதக் கைக்குழந்தையான மின்ஹாவை அவர் காப்பாற்றிய கதை சிலிர்ப்பூட்டுவதாக உள்ளது.
“தொடர்ச்சியாக பெய்துகொண்டிருந்த மழை ஆகஸ்ட் 16 அன்று இரவு மிக மோசமானது. மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டைச் சுற்றிலும் வெள்ளம். உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மட்டும் புரிந்தது. எங்கள் மகள் மின்ஹாவை நிறைய துணிகளால் சுற்றி ஒரு அலுமினிய பாத்திரத்தில் வைத்தோம். பின்னர் இடுப்பளவு நீரில் மேலும் மேலும் நீர் உயர, கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு, குழந்தையோடு தத்தளித்து முன்னேறினோம். வெறும் மூன்று கிலோ மட்டுமே எடை கொண்ட எங்களது குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அலுமினிய பாத்திரத்தை மிக ஜாக்கிரதையாகப் பிடித்துக்கொண்டு முன்னேறினோம்” என்று ஒரு மிகப்பெரிய சாகசப் பயணத்தின் முதல் சில மணி நேரங்களை நம்மிடம் விவரிக்கத் தொடங்குகிறார் ஹெலன்.
இவ்வாறே ஒரு கிலோமீட்டருக்குக் குழந்தையுடன் மிகக் கடுமையான சூழலில் முன்னேறிய பின்னர், இரண்டு பேர் சிறிய நீர்ப்படகில் தென்பட்டுள்ளனர். இவர்களைப் படகில் ஏற்றிக்கொள்ளவும் அவர்கள் இசைந்தனர்.
முதலில் தனது பிறந்த வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்த ஹெலன் மேலும் மழை தீவிரமடையும் என்ற நிலையால் அதனை மாற்றிக்கொண்டுள்ளார். திருவல்லாவிலுள்ள தனது அத்தையின் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தார் அவர்.
“திருவல்லாவிலுள்ள எனது அத்தை வீட்டுக்குச் செல்வது என்ற எனது முடிவை அவர்களிடம் கூறினேன். இன்னும் ஐந்து கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும் என்றபோதிலும் படகில் வந்தவர்கள் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டனர். எங்களைப் படகில் ஏறி உட்கார்ந்துகொள்ளச் சொன்னார்கள். நீரோட்டம் மிகக் கடுமையாக இருந்ததால் அவர்களால் துடுப்பைக் கொண்டு படகைச் செலுத்தமுடியவில்லை. இதனால் எங்களை அமர வைத்து ஐந்து கிலோமீட்டர்களுக்குப் படகைத் தள்ளித் தள்ளியே செலுத்தினார்கள்” என்றி நன்றியோடு தனது படகுப் பயணத்தை ஹெலன் நினைவு கூர்கிறார்.
அவ்வாறு செல்கையில் பல தருணங்களில் நீரோட்டம் கூடியபோது, நீர்மட்டம் மேலெழும்பியபோதும் அவற்றில் இருந்து தான் சென்ற சிறு படகினைக் கடவுளே காப்பாற்றியதாக அவர் நினைத்துக்கொண்டாராம்.
“இப்படியாக இரண்டு மணி நேரம் கழித்து காவும்பாகம் பகுதியை அடைந்தபோது தார்ச்சாலைகள் பகுதியளவுக்குத் தென்படத் தொடங்கின. அங்குதான் நாங்கள் படகில் இருந்து இறங்கினோம். யாரென்றே தெரியாமல் படகில் வந்து உதவிய அந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து நடக்கத் தொடங்கினோம். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள எனது அத்தை வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கையில் அவ்வழியாகச் சென்ற கார் ஒன்றில் இருந்தவர்கள் எங்களுக்கு லிஃப்ட் தந்து உதவினார்கள். அப்போதில் இருந்து எங்கள் அத்தை வீட்டில்தான் இருக்கிறோம். எங்கள் குழந்தையும் நலமாக இருக்கிறது. தற்போது உறங்குகிறாள்” என்று வழியும் கண்ணீரைத் துடைத்தபடி “கடவுள்தான் எங்களையும் எங்கள் குழந்தையையும் காப்பாற்றினார்” என்று கூறுகிறார் ஹெலன்.
இப்படிக் கடவுளின் அருளால் மின்ஹா உயிர்தப்புவது இரண்டாவது முறையாகும். மூன்று மாதம் முன்பே குறைப்பிரசவத்தில் வெறும் 960 கிராம் எடையோடு மின்ஹா பிறந்துள்ளாள். அதைத் தொடர்ந்து 70 நாட்கள் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அக்குழந்தை மீண்டுள்ளது.
“கடந்த ஏழு மாதங்களில் பல சோதனைகளைப் பார்த்துவிட்டோம். கடவுளிமன் அருள் மட்டும் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்றே தெரியவில்லை” என்று நெகிழ்ந்தபடி அவர் தன் கதையை முடித்தார்.