Kochi: கேரளாவில் பெய்து வரும் கன மழை வெள்ளத்தில் சிக்கி, பல இடங்களில் தவித்து வரும் மக்களை மீட்கும் பணி போர் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முப்படைகள், பேரிடர் மேலாண்மை குழு மற்றும் தொண்டு குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தென்னக கடல்படை தனது அனைத்து பயிற்சிகளையும் நிறுத்திவிட்டு, தனது படையை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நேற்று இரவு ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான மக்கள் மீட்கப்பட்டனர். பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிலை குலைந்துள்ளது. கொச்சி விமான நிலையத்தை தொடர்ந்து, மெட்ரோ ரயில் சேவையும் வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் மழை காரணமாக ஏற்பட்டுள்ள மொத்த பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. மிக கனமழை வரும் சனிக்கிழமை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் நிலவரம் குறித்து சமீபத்திய செய்தி:
- கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 13-க்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக இருந்து வருகிறது.
- இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி கேரளாவுக்குச் செல்ல உள்ளார். நாளை காலை அவர் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரள முதல்வர் பினராயி விஜயன், 'மாநில அளவில் மிகவும் ஆபத்தான நிலைமை இருக்கிறது. கிட்டத்தட்ட கேரளாவின் அனைத்து கிராமங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இது குறித்து பிரதமர், ராணுவத் துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்யத் தயார் என்று கூறியுள்ளனர்' என்றார்.
- தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கேரள மக்களுக்கு அடுத்த 7 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அழைப்பு வசதி செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளது.
- பாதுகாப்புப் படையினர், திருச்சூர், ஆலுவா பகுதிகளில் இருக்கும் மக்களை கயிறு கட்டி ஹெலிகாப்ட்டரில் தூக்கம் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
- பிரதமர் மோடியின் அறிவறுத்தல்படி, புதிதாக பாதுகாப்புப் படையினரை ராணுவத் துறை அமைச்சர் அனுப்பியுள்ளார்.
- 'இன்று மீண்டும் கேரள முதல்வரிடம் பேசினேன். வெள்ள நிலைமை குறித்து அவரிடம் கேட்டறிந்தேன். ராணுவத் துறை அமைச்சரிடம் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தமாறு கேட்டுள்ளேன். கேரள மக்கள் பாதுகாப்புக்கு நான் வேண்டிக் கொள்கிறேன்' என்று பிரதமர் மோடி இன்று காலை ட்வீட் செய்துள்ளார்.
- 'சாலக்குடியிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மக்களும், ஆலுவாவிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மக்களும் உடனடியாக அங்கிருந்து வேறு இடத்துக்குச் செல்லுங்கள்' என்று முதல்வர் பினராயி விஜயனின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மூணார் மற்றும் பொன்முடி போன்ற சுற்றுலா தளங்களுக்கான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதே போல் சபரிமலைக் கோயிலுக்கும் பக்தர்கள் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- வரலாற்றில் முதல்முறையாக கேரள அணைகளின் 33 மதகுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.