Thiruvananthapuram: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் பலநூறு மக்கள் இறந்துள்ளனர், பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
வெள்ளம் பாதித்த ஆழப்புழா, எர்ணாக்குளம், திருச்சூர் போன்ற பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரவும் பகலுமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களின் உதவிகளை பாராட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சன்மானம் வழங்க உள்ளதாக அறிவித்தார். அதனை அடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு தலா 3,000 ரூபாய் வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்
அதனை அடுத்து, மீனவர்கள் குழு தலைவர் கெய்ஸ் மொகமத் வெளியிட்டுள்ள வீடியோவில், “வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்த மக்களை காப்பாற்றியதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், நாங்கள் செய்த உதவிகளுக்காக 3,000 ரூபாய் பணம் கொடுப்பது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. கேரளா வெள்ள பாதிப்பில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.