This Article is From Aug 25, 2018

புவி வெப்பமாதல்: கேரள வெள்ளத்தைத் தொடர்ந்து எச்சரிக்கும் வல்லுநர்கள்!

உலகின் வெப்ப அளவு வெறும், 1 டிகிரி செல்ஷியஸ் கூடியதன் விளைவைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனப்படுகிறது

புவி வெப்பமாதல்: கேரள வெள்ளத்தைத் தொடர்ந்து எச்சரிக்கும் வல்லுநர்கள்!
Kerala:

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் பெய்த அடைமழையால், மாநிலத்தில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, ஏறக்குறைய 13 லட்சம் பேர், நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஓர் ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய வழக்கமான மழையை விட, கடந்த 2 வாரங்களில் மட்டும் இரண்டரை மடங்கு அதிக மழை பெய்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கேரள கனமழை குறித்து இந்திய வெப்ப மண்டல வானிலை தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானி ராக்சி மேத்யூ கால், ’இந்தியாவில் 1950 - 2017 ஆண்டுகளுக்குள், பெய்யும் கனமழையின் அளவு மும்மடங்கு அதிகரித்துள்ளதை கண்டுபிடித்துள்ளோம். இதுதான் வெள்ளப் பெருக்குக் காரணமாக அமைகிறது’ என்று பிரச்னையின் வீரியத்தை விளக்குகிறார்.

இந்தக் காலக்கட்டத்தில் வெள்ளம் காரணமாக, 69,000 பேர் இறந்துள்ளனர். மேலும், 1.7 கோடி பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளன என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

கேரளாவில் சமீபத்தில் மழை கொட்டித் தீர்த்தபோது, மாநிலத்தில் இருக்கும் 35 அணைகளும் திறந்துவிடும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, இடுக்கி அணை 26 ஆண்டுகள் கழித்து திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘தற்போது கேரளாவில் நாம் பார்த்த பெரு வெள்ளம், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதியே’ என்று எச்சரிக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி கிரா வின்க்.

அவர் தொடர்த்து, ‘நாம் தொடர்ந்து மாசு அளவை அதிகரித்துக் கொண்டே போனால், விளைவுகள் இன்னும் மோசமடையும்’ என்றுள்ளார்.

உலகின் வெப்ப அளவு வெறும், 1 டிகிரி செல்ஷியஸ் கூடியதன் விளைவைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனப்படுகிறது.

அதேநேரத்தில் தற்போது இந்தியா வெளியிட்டு வரும் மாசு அளவை வைத்துப் பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் வெப்ப அளவு 1.5 டிகிரி செல்ஷியஸ் முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

‘இந்தியா, சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், மாறிவரும் பருவநிலையும் வெப்ப அளவு கூடுதலும் பெரும் தாக்கத்தை எற்படுத்தும். இந்தியா, ஜிடிபி-யில் 2.8 சதவிகிதத்தை இழப்பது மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள பாதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்’ என்று உலக வங்கி கூறுகிறது.

இதை கணக்கில் கொண்டு தான், 196 நாடுகள் பங்கேற்ற பாரீஸ் ஒப்பந்தத்தில், உலக வெப்ப அளவை 2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்குக் குறைக்க வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

‘பருவநிலையை கணிப்பது மேலும் மேலும் கடினமாகிக் கொண்டே போகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, புவி வெப்பமாதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், வரும் காலங்களில் மழை நாளில் அதிக மழை பெய்யும். வெயில் காலங்களில் அதிக உஷ்ணம் இருக்கும்’ என்று எச்சரிக்கை சமிக்ஞை கொடுக்கிறார் விஞ்ஞானி கிரா.

.