Thiruvananthapuram: கேரளா மாநில முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ள சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகளில் சிக்கித் தவித்து வரும் குடும்பங்கள், பள்ளிக் கல்லூரி விடுதிகளில் தத்தளித்து வரும் மாணவர்கள், வழிபாட்டுத் தலங்களில் சிக்கிக் கொண்டோர் எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் இருப்பிடத்தை அறிவித்து உதவி கோரி வருகின்றனர்.
வாட்ஸ்அப் மூலமாக கேரள மக்கள் பலர் கையெடுத்து வணங்கி தங்களுக்கான உதவிகளைக் கேட்கும் வீடியோக்கள் வைரலாகப் பரவி வருகின்றன. கேரள மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கும் தங்களது உறவினர்களைக் காக்கும்படி பலரும் கூகுள் மேப்ஸ் மூலம் இருப்பிடத்தை அறிவித்து சமூக வலைதளங்களில் உதவி கோரி வருகின்றனர். உள்ளூர் ஊடகங்களும் மாட்டிக்கொண்டு தவிக்கும் மக்களுக்கு உதவி வருகின்றன.
சமீபத்தில் ரன்னி பகுதியைச் சேர்ந்த ஒருவர் ‘நாங்கள் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் சிக்கித் தவிக்கிறோம். முதல் தளம் முற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மொபைல் போன் சார்ஜ் குறைந்து கொண்டே இருக்கிறது. எங்களை தயவு செய்து காப்பாற்றுங்கள்’ என வெளியான வீடியோ வைரல் ஆனது.
மத்திய கேரளாவில் உள்ள பத்தணம்திட்டா மாவட்டம் முழுவதுமே வெள்ளம் சூழ்ந்து உள்ள வேளையில் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் பக்தர்களும் மாணவர்கள் சிலரும் சிக்கித்தவித்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. பலரும் தங்கள் குடும்பத்தாரோடு, கைக்குழந்தைகளோடு, வயதானவர்களோடு சிக்கித் தவித்து வருகின்றனர். அவரவர் இருக்கும் இருப்பிடத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களைக் காப்பாற்றுமாறு உதவி கேட்டு வருகின்றனர். மேலும் பலர் தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் ராணுவ மீட்புக்குழு எண்ணுக்கு அழைத்தால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
சாலைகள், நெடுஞ்சாலைகள் என அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் படகுகள் மூலம் முதற்கட்டமாக பெண்களும், குழந்தைகளும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.