This Article is From Aug 27, 2018

முல்லை பெரியாறு அணையில் நீர் திறந்த விவகாரம்: தமிழக அரசு வாதம்

முல்லை பெரியாறு அணையில் நீர் திறந்ததும் கேரள வெள்ளத்துக்கு ஒரு காரணம் என்று கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது

Advertisement
தெற்கு Posted by

முல்லை பெரியாறு அணையில் நீர் திறந்ததும் கேரள வெள்ளத்துக்கு ஒரு காரணம் என்று கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. 

கேரளாவில் கடந்த 8 ஆம் தேதி முதல் பெய்த மழையால் அங்கு பெரும் அளவிலான வெள்ளம் ஏற்பட்டு பலத்த சேதங்களை ஏற்பட்டுத்தின. தொடர்ந்து அங்கு பல்லாயிரக்கணக்கானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கேரள வெள்ளம் குறித்தான வழக்கில் கேரள அரசு, ‘வெள்ளம் ஏற்பட முல்லை பெரியாறு அணையில் அதிக அளவு நீர் தேக்கி வைத்ததும் ஒரு காரணம். முல்லை பெரியாறில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி அணையில் நீர் அளவு அதிகரித்து, அந்த அணையையும் திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டது. முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு நீர் இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக திறந்து விடக் கூறிக் கேட்டுக் கொண்டோம். 139 அடி வந்த போதும் கேட்டோம். ஆனால், தமிழகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று வாதிட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, ‘முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்து கேரள அரசுக்குத் தெரியபடுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. முல்லை பெரியாறு அணைக்குக் கீழ் வாழும் கேரள மற்றும் தமிழக மக்களின் நலனில் தமிழக அரசுக்கு முழு அக்கறை உள்ளது. மேலும் அணையில் 136 அடி வந்த போதே, கேரள அரசு அதிகாரிகளுக்கு தமிழகம் சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி, இரு அரசு தரப்பு அதிகாரிகளும் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அனைத்தும் சரியாகத்தான் உள்ளது என்று ஒப்புக் கொண்டனர். அதேபோல ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் அணையை சோதனை செய்து, அது பாதுகாப்பாகத்தான் உள்ளது என்று உறுதியளித்தனர். எனவே, கேரளாவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது’ என்று பதில் வாதம் வைத்துள்ளது.

முல்லை பெரியாறு அணை, கேரள இடுக்கி மாவட்டத்தின் தெக்கடி என்ற இடத்தில் இருக்கிறது. ஆனால், இந்த அணையை தமிழக அரசு நிர்வகித்து வருகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement