Read in English
This Article is From Aug 24, 2018

முல்லை பெரியாறு அணை குறித்து கேரளா திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம்: முதல்வர் குற்றச்சாட்டு

கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் ஆன பின்னர்தான் முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படப்பட்டது

Advertisement
இந்தியா
Chennai:

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கேரள அரசு திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக, தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த வியாழன் அன்று உச்சநீதிமன்றத்தில், “முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழக அரசால் திடீரென்று நீர் திறந்துவிடப்பட்டதும் கேரளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று” என்று கேரள அரசு தெரிவித்திருந்தது.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர், முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால்தான் கேரளத்தில் வெள்ளம் ஏற்பட்டது என்னும் கேரள அரசின் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்தார்.

“கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் ஆன பின்னர்தான் முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படப்பட்டது. மேலும் தொடர்ந்து நீர்மட்டம் உயரும்போது எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன் படிப்படியாகத்தான் நீர் வெளியேற்றப்பட்டது” என அவர் செய்தியாளர்களிடம் கேரள அரசின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார்.

Advertisement

கேரள மாநிலப் பகுதியில் அமைந்திருந்தாலும் முல்லை பெரியாறு அணை தமிழக அரசுக்கு சொந்தமானதாகும். இதனைத் தமிழக அரசே இயக்கியும் பரமாரித்தும் வருகிறது.

ஆகஸ்ட் 16 அன்று கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் மழைப்பொழிவை அளக்க விடாமல் தமிழக அதிகாரிகளை கேரளா தடுக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதை வைத்தே நீர்வரத்து அளவைக் கணிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழக நீர்வளத்துறையினர் முல்லைப்பெரியாறு அணையில் நீர் தேக்குவது, திறந்துவிடுவது ஆகியவற்றை நீர்வரத்து அளவை வைத்தே செய்து வருகின்றனர். ஆகவே நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவின் அளவைப் பற்றிய தகவல்களைத் தமிழக அதிகாரிகளுடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளுமாறு தங்களது மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுகிறேன்" என்று தமிழக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement