ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சரித் (இடது) முன்பு கைது செய்யப்பட்டார்
ஹைலைட்ஸ்
- இரு முக்கிய நபர்கள் தேசிய புலனாய்வு முகமையால்(NIA) பெங்களூருவில் கைது
- (UAPA) சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆரை பதிவு செய்துள்ளது
- குற்றவாளியாக கருதப்படுகிற சுரேஷ் ஐக்கிய அரபு தூதரகத்தின் முன்னாள் ஊழியர்
Thiruvananthapuram: கேரளாவில் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இரு முக்கிய நபர்கள் தேசிய புலனாய்வு முகமையால்(NIA) பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)(UAPA) சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆரை பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த வழக்கு சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருப்பதால் என்ஐஏ விசாரிப்பதாகவும், இவ்வாறு கடத்திவரப்படும் தங்கத்தின் மூலமாக கிடைக்கும் வருவாய் பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஏஎன்ஐ சந்தேகிப்பதாக தெரியவருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரித், ஸ்வப்னா பிரபா சுரேஷ், பாசில் ஃபரீத் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோருக்கு மாநில காவல்துறை உதவி செய்ததாக கேரள எதிர்கட்சித் தலைவர் சென்னிலதா குற்றம்சாட்டியுள்ளார். மாநிலம் முழுவதும் லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில் ஸ்வப்னா எவ்வாறு பெங்களூரூவுக்கு தப்பிச் சென்றார் என்கிற கேள்வியை சென்னிலதா எழுப்பியுள்ளார்.
மாநில பாஜக தலைவரும் இதே கேள்வியை முன்வைத்துள்ளார்.
பிரதான குற்றவாளியாக கருதப்படுகிற சுரேஷ் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் மற்றும் கேரளாவின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் முன்னாள் சந்தைப்படுத்தல் அதிகாரி ஆவார். கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து அவரது ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதலமைச்சர் அலுவலகத்துடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்ததாகவும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதை முதல்வர் மறுத்துள்ளார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டு ஐ.டி செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
"இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து, ஸ்வப்னா சுரேஷ் ஒரு கும்பலின் முக்கிய உறுப்பினராக உள்ளார், இராஜதந்திர பாதுகாப்பின் அட்டையைப் பயன்படுத்தி அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சுங்கத் துறையை மோசடி செய்வதன் மூலம் இந்தியாவுக்கு ஏராளமான தங்கங்களை கடத்தலில் ஈடுபட்டுள்ளார். மேலும் கடத்தல் நடவடிக்கைக்கு வசதியாக தீவிரமாக பங்கேற்க சதித்திட்டம் தீட்டியுள்ளார், ”என்று சுங்கத் துறையானது நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் மற்றொரு முக்கிய அம்சமாக காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தீப் நாயரின் மனைவி, “தன்னுடைய கணவர், சரித் மற்றும் ஸ்வப்னாவின் உதவியுடன் தங்கத்தை கடத்தினார்” என சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “ஸ்வப்னா தூதரகத்தின் சரக்குகளை விமான சரக்கு வளாகத்திலிருந்து அகற்றுவதற்கான ஆவணங்களை ஏற்பாடு செய்வார்” என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சந்தீப் நாயரின் வீட்டில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.