அவை காவலர்கள் பாதுகாப்புடன் செல்லும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது.
Thiruvananthapuram: கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடது ஜனநாயக முன்னிணி அரசால் சட்டசபையின் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் அமர்வின் தொடக்க உரையில், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய விமர்சங்களும் இடம்பெற்றது.
இதுதொடர்பாக ஆளநர் தனது தொடக்க உரையை அளிக்கும் போது, இதை நான் வாசிக்க வேண்டும் என முதல்வர் விரும்புவதால் நான் இந்த பத்தியை வாசிக்கப் போகிறேன். எனக்கு சிஏஏ தொடர்பாக வேறு பார்வை இருந்தாலும், இது கொள்கை அல்லது திட்டத்தின் கீழ் வராது. இது அரசின் பார்வை என்று முதல்வர் கூறியுள்ளார். அவருடைய விருப்பத்திற்கு மதிப்பளிப்பதற்காக நான் இந்த பத்தியை வாசிக்கப்போகிறேன் என்று அவர் கூறினார்.
முன்னதாக, கேரள சட்டப்பேரவையில் சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, இதுபோன்ற தீர்மானங்களால் பயனில்லை என்றும், மத்திய அரசின் சட்டத்தை மாநிலங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று அம்மாநில ஆளநர் ஆரிப் முகமது கான் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கேரள சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர் ஆரிப் முகமது கானை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கேரள சட்டசபையில் இன்று முதல்வர் பினராயி விஜயனும், சபாநாயகர் பி.ஸ்ரீ.ராமகிருஷ்ணனும் பட்ஜெட் தொடக்க உரையை வழங்க ஆளுநரை அழைத்தனர். அப்போது, எதிர்கட்சிகள் ஆளுநரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, அவை காவலர்கள் பாதுகாப்புடன் மனித சங்கிலி அமைக்கப்பட்டு ஆளுநர் மேடையை அடைந்து தனது உரையை வழங்கினார். எனினும், பதாகைகளை பிடித்த படி, எதிர்கட்சி எம்எல்ஏக்கள் 'கோ பேக்' கோஷங்களை எழுப்பினர்.
முதல்வரும், சபாநாயகரும் பலமுறை எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்ற போதிலும், அவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, 10 நிமிடங்களுக்கு பின்னர் எதிர்கட்சி எம்எல்ஏக்களை அவை காவலர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, ஆளநர் தனது உரையை வழங்கினார். எனினும், அவையின் மையப் பகுதியில் நின்ற படி, ஆளுநருக்கு எதிராக எதிர்கட்சி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, ஆளுநர் உரையாற்றும் போது அவையில் இருந்த வெளிநடப்பு செய்த எதிர்கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையின் வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முஸ்லீம்கள் அல்லாத ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும், சர்ச்சைக்குரிய குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முதன் முதலாக கேரள மாநிலமே உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.