சபரிமலைக்கு சென்றுவந்த கனக துர்கா மற்றும் பிந்து அம்மினி.
New Delhi: சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பிய கனக துர்கா மற்றும் பிந்து அம்மினி ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள போலீசார் இரு பெண்களுக்கும் 24 மணிநேர பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.
2 பெண்களும் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எல்.என். ராவ், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கேரள அரசுக்கு 2 பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
கடந்த வாரம் கனக துர்காவை அவரது மாமியார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. சபரிமலைக்கு சென்று திரும்பிய அவர் மீது கோபம் அடைந்த மாமியார் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார். இதில் தலையில் காயம் ஏற்பட்ட கனக துர்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதனை குறிப்பிட்டு வாதாடிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ''2 பெண்களின் உயிருக்கும், சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தாக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த 2 பெண்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டனர்.