வாடகை கொடுக்க முடியாததை காரணம் காட்டி அந்த வீட்டின் உரிமையாளர், அவர்களை வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் வந்தன.
ஹைலைட்ஸ்
- ட்விட்டரில் கேரள அரசுக்கு கோரிக்கை வைத்தார் சீமான்
- கேரள அரசும் சீமானின் கோரிக்கைக்கு உடனடியாக ரிப்ளை செய்தது
- அதற்கு சீமான் ட்விட்டரிலேயே நன்றி தெரிவித்தார்
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய முழுவதற்கும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினால், பலரது வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தின் கொள்வாயலல் என்ற பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் சில தமிழ் குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. ஊரடங்கினால் வருமானம் இல்லாமல் அவர்கள் தவித்துள்ளனர். வாடகை கொடுக்க முடியாததை காரணம் காட்டி அந்த வீட்டின் உரிமையாளர், அவர்களை வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் வந்தன.
இது குறித்த செய்தியை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அந்த செய்தியை ரீ-ட்வீட் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கேரள முதல்வர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்து, பிரச்னையை சரி செய்ய வலியுறுத்தினார்.
சீமான், “கேரளாவில் வசிக்கும் 48 தமிழ் குடும்பங்கள் வாடகை கொடுக்க முடியாத காரணத்தினால் வீட்டை விட்டு துரத்தப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். ஊரடங்கினால் தினக்கூலிகள் கடும் சுமைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. இந்தப் பிரச்னையில் நீங்கள் தலையிட வேண்டும்,” எனக் குறிப்பிட்டு கேரள முதல்வர் அலுவலக கணக்கை டேக் செய்தார்.
அதற்கு கேரள முதல்வர் அலுவலகம், “இந்தப் பிரச்னையைப் பற்றி தெரிந்து கொண்டோம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம். பிரச்னையைத் தெரியப்படுத்தியதற்கு நன்றி,” என்று ரிப்ளை செய்தது.
அதற்கு சீமான், “இந்தப் பிரச்னையில் தலையிட்டதற்கு நன்றி. உங்களின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி. உங்கள் நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்,” என்று நன்றி தெரிவித்துள்ளார்.