Thiruvananthapuram: கேரளா கான்வெண்டில், கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 13 முறை கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் பிராங்க்கோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்கள் ஆகியும், வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய விடுதியில் உள்ள மற்ற கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பிஷப் பிராங்கோ மீது கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரியை ஒரு பாலியில் தொழிலாளி எனச் கேரளாவின் பூஞ்சார் தொகுதியை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, அந்த கன்னியாஸ்திரி பாலியல் தொழிலாளி என்பதில் ஏதும் சந்தேகம் உள்ளதா? 12 முறை அவருக்கு சுகமாக இருந்துள்ளது. 13வது முறை அது கற்பழிப்பு ஆகியுள்ளதா? 12 முறை நடந்தபொழுது அவர் எங்கே இருந்தார்? யாருக்காக இந்த புகாரை அவர் கொடுத்துள்ளார்? முதல் முறை கற்பழிப்பு நடந்தபோது அவர் ஏன் புகார் அளிக்கவில்லை? என கேள்வி கேட்டுள்ளார். எம்.எல்.ஏவின் இந்த கருத்தால் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு கேரள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு காரில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஜார்ஜுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.