குடும்பத்தினருடன் பொருன்னன் ராஜன்.
Kannur: சினிமா பாணியில் வங்கியில் கடனுக்காக அலைந்தவருக்கு லாட்டரில் ரூ. 12 கோடி பணம் விழுந்துள்ளது. லோனுக்காக லோலோவென வங்கிக்கு நடந்தவருக்கு கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் கொட்டியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் பொருன்னன் ராஜன். இவர் ரப்பர் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வங்கியில் கடன்பெற்ற ராஜன், அதனை அவ்வப்போது செலுத்தி வந்துள்ளார். மொத்தம் 3 முறை கடன் பெற்ற அவர், 4-வது முறையாக கடனைப் பெற வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது, கிறிஸ்துமஸ் - புத்தாண்டு லாட்டரி சீட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றை ரூ. 300 கொடுத்து வாங்கிக் கொண்டார் ராஜன்.
கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொந்தக்காரராவோம் என அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில் லாட்டரி சீட்டு முடிவுகள் வெளியானபோது, முதல் பரிசு ரூ. 12 கோடி பொருன்னன் ராஜனுக்கு அடித்துள்ளது.
வரி மற்றும் ஏஜென்சி கமிஷன் உள்ளிட்டவை போக ராஜனுக்கு ரூ. 7.20 கோடி கைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடீஸ்வரர் ஆகப்போவதால் இன்பதிர்ச்சிக்கு ஆளான ராஜன் தனது இளைய மகளின் படிப்புச் செலவுக்கு லாட்டரி பணம் பயன்படும் என்று தெரிவித்துள்ளார்.
லாட்டரி சீட்டின் விலை ரூ. 300 என்பது அவருக்கு அதிகமான தொகையாக தெரிந்துள்ளது. இதனால் யாரேனும் தன்னை திட்டிவிடுவார்கள் என்று எண்ணி, லாட்டரி சீட்டு வாங்கியதை யாருக்கும் சொல்லாமல் இருந்துள்ளார் ராஜன்.
'வங்கியில் வாங்கிய கடனை எப்படி அடைப்பேன் என்று கவலையில் இருந்தேன். இப்போது கோடீஸ்வரன் ஆகப்போகிறேன்' என்று ராஜன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவருக்கு அதிர்ஷ்டம் எப்போதும் இருக்கும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சின்னச் சின்ன தொகையை லாட்டரியில் ராஜன் பெற்றிருக்கிறார். இதனால் பெற்ற ஊக்கம்தான் அவரை பெரிய பரிசுக்கான லாட்டரியை வாங்க வைத்துள்ளது.
இரண்டாவது பரிசாக ரூ. 5 கோடி 10 பேருக்கு தலா ரூ. 50 லட்சமாக பிரித்து வழங்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக ரூ. 1 கோடி பணம் 10 லட்சமாக 10 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படவுள்ளது.