பிஷப் ஃப்ரான்கோ முலக்கால்
New Delhi: கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய திருப்பமாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பிஷப் ஃப்ரான்கோ முலக்கால் ராஜினாமா செய்துள்ளார்.
பிஷப் மீதான புகார்கள் வாடிகன் நகரில் உள்ள தேவாலய நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையிடமான வாடிகன் நகரின் இந்திய பிரதிநிதி, கன்னியாஸ்திரி விவகாரம் குறித்து விசாரணை நடத்தக்கூடும் என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஷப் ஃப்ரான்கோ முலக்கால் தனது ராஜினாமா கடிதத்தில், “எனது கடினமான நேரங்களில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பற்றிய சர்ச்சைகள் ஊடகங்களில் வந்திருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளதாக போலீஸ் கூறியுள்ளது. இதனால் விசாரணைக்காக நான் அழைக்கப்படலாம். எனக்கு என்ன நேரும் என்பதை கடவுளின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். இந்த விவகாரத்தில் ஏற்படும் முடிவை நான் எதிர்பார்த்துள்ளேன். நான் பதவி விலகுவதால் எனக்கு பதிலாக மேத்யூ கொக்கண்டம் நிர்வாகத்தை கவனிப்பார். நான் பதவி விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிஷப் ஃபிரான்கோ முலக்கால் தன்னை கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிஷப்பை கண்டித்து பல போராட்டங்கள் நடந்ததை தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையிடமான வாடிகன் தலையிட வேண்டும் என்று கன்னியாஸ்திரி கூறி வருகிறார்.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்ட மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் நிறுவனத்தின் மீது கோட்டயம் மாவட்டம் குரவிலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்களின் புகைப்படத்தை வெளியிடுவதற்கு இந்திய சட்டம் தடை விதிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.