பாதிக்கப்பட்ட நர்ஸ் அசீல் தேசிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
New Delhi: சவூதி அரேபியாவில் பணியாற்றி வரும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் பணியாற்றும் கேர நர்ஸ்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்திருந்தார். இந்த சூழலில், கேரள நர்ஸ் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரைப் பறிக்கும் வைரஸாக இந்த கரோனா உள்ளது. இதனை உஹான் வைரஸ் என்றும் அழைப்பார்கள். சீனாவிலிருந்து இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இதன் பாதிப்புக்கு சீனாவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் கேரளாவை சேர்ந்த நர்ஸ்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 100 பேரை சோதனை செய்ததில், ஒரேயொருவருக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அவர் அசீர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சவூதி அரேபியாவில் உள்ள அசிர் அப அல் ஹயாத் மருத்துவனையில் பணியாற்றும் கேரள நர்ஸ்கள் சிலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இதனை முக்கிய பிரச்னையாக கருதி அவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவுக்குள் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க விமான நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 60 விமானங்களில் வந்த 12,800 பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டன.
இதேபோன்று கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் வந்தவர்களுக்கு, அத்தகைய பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவை மையமாக கொண்ட கரோன வைரஸ், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி வருகிறது.
அதிக காய்ச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகளுடன் விமான நிலையம் வரும் பயணிகள் தனியாக அழைத்து செல்லப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
கரோனா வைரஸ் கடந்த 2002-ல் சீனாவில் 349 பேரையும், 2003-ல் ஹாங்காங்கில் 299 பேரையும் பலி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், தொண்டை வறட்சி, நாசியில் ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.